Tuesday, August 31, 2010

இவர்கள் திருந்துவார்களா?

இவர்கள் திருந்துவார்களா?

நேற்று இரவு சுமார் 8  மணிக்கு ஊட்டியிலிருந்து பஸ் மூலம் மேட்டுப்பாளையம் வந்துகொண்டிருந்தேன்.  குளிர் காற்று நடுங்கவைத்தது.   . பஸ்ஸில் நல்ல கூட்டம். சிட்டிங் சீட் இல்லை.  ஒரு பெரியவர் சுமார் 50 வயதிருக்கும்.  டிரைவர் சீட் அருகில் நின்று கொண்டார்.  பஸ் வளைவில் திரும்பும்போது அவரால் நேராக நிற்க முடியாமல் சாய்ந்து கொண்டே வந்தார்.  திடீரென்று  அவர் என்ஜின் மீது உட்கார்ந்தார்.    ஒரு வளைவில் நன்றாக அவர்  சாய்ந்துவிட்டார். கீழே விழாமல் இருக்க கியர் ராடை பிடித்துக்கொண்டார் .  சக பயணிகள் அதிர்ந்து  விட்டனர்.  அவரை சீட்டில் உட்கார சொன்னார்கள்.  மறுத்துவிட்டார்.   எவ்வளவு சொல்லியும் கேட்க்காமல் எழுந்திருக்கவில்லை
குன்னூர்வரை அவர் அப்படியேதான் வந்தார்.  அனைவரும பயந்துகொண்டே வந்தனர்.

தான் செய்வது தவறாக இருந்தாலும் அதை  விடாப்பிடியாக திருத்திக்கொள்ள விரும்பாதவர்களால் பிரச்னை அவருக்கு மட்டுமல்ல, மற்றவருக்கும் தான்.

இவர்கள் திருந்துவார்களா?

Friday, August 27, 2010

அவரைபார்த்தேன்

 நேற்று நான்  பஸ்ஸில்  அதே நபரை மீண்டும் பார்க்க நேர்ந்தது.   அவர் என்னை நன்றாக ஞாபகம் வைத்திருக்கிறார்.   அவராகவே என்னிடம் பேசினார். இப்பொழுது நான் பஸ்ஸிலிருந்து  தேங்காயை வீசுவதில்லை.  வாரம் ஒரு நாள் நேராகவே சென்று சாமி கும்பிடுகிறேன்.  எனது தவறை உணர்ந்தேன்  என்றார். 

நான் அவரிடம் நன்றி என்று கூறிவிட்டு இறங்கிவிட்டேன்.

இனி அது அவர்பாடு

Monday, August 23, 2010

என்ன ஒரு அபத்தம்

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மத்தம்பாளையம் விநாயகர் கோயில் உள்ளது.  கடவுளை வணங்கும்முறை அவரவர் விருப்பம்.  அது இன்னொருவரை எந்த அளவும் பாதிக்ககூடாது.   ஒருமுறை கோவையிலிருந்து பேருந்துவில் வந்துகொண்டிருந்தேன்.  அப்போது அருகிலிருந்த நபர்  தேங்காய் ஒன்றை எடுத்துக்கொண்டு படியில் நின்றுகொண்டார்.  கோயில் அருகே வந்ததும் தேங்காயை வீசி உடைத்தார்.  எனக்கு பகீரென்றது.  நல்லவேளை அங்கு யாரும் இல்லை.

அவரிடம் " எதற்கு இப்படி செய்தீர்கள்"  என்று கேட்டேன்.
" வேண்டுதல்"  என்றார்.
" இப்படி வீசும் போது யாரவது மீது அடிபட்டால் என்ன ஆவது? பஸ்சின் ஸ்பீடுக்கு அடி பலமாக படுமே?  உங்கள் வேண்டுதலுக்கு அவர் பலி ஆடா?  ஏதாவது குழந்தைக்கோ, அவருக்கோ தலையில் பட்டால் உயிருக்கே ஆபத்தாகுமே "

" அது அவர் விதி!  எனது வேண்டுதலை நான் செய்யவேண்டும் . நடப்பதற்கு அவர்தான்  பொறுப்பு"

"நீங்கள் சாமி கும்பிடும்போது இன்னொருவர் இப்படி செய்து உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைக்கு அடி பட்டால் சும்மா இருப்பீகளா?

" நான் இந்தமாதிரி யோசிக்கவில்லை"

" அந்த நிலையை  நினைத்துப்பாருங்கள்  சார்! "



அதற்குள் எனது நிறுத்தம் வந்துவிட்டது. இறங்கிவிட்டேன்.

மனதில் ஒரு சங்கடம் அரித்துக்கொண்டே இருக்கிறது.  யாருக்கு எதாவது அடிபடுமோ என்று.  

இவர் யோசித்திருப்பாரா?